இசைஞானி இளையராஜா அங்கிள் வீடியோ கால் மூலமாக பாராட்டியது, எனக்கு ஒரு உண்மையான மகிழ்ச்சியளிக்கிறது என்று லிடியன் நாதஸ்வரம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

இளம் தமிழ் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் சமீபத்தில் தனது ‘The World’s Best’ என்ற பட்டத்தையும், அதற்குப் பரிசு தொகையாக 1 மில்லியன் அமெரிக்க டாலரையும் பெற்றதன் மூலம் உலகம் முழுக்க பிரபலமானார்.

ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியில் பயின்ற லிடியன், இசையமைப்பாளர் வர்ஷன் சதீஷின் மகன் ஆவார். வர்ஷன் சதீஷின் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே சமூக வலைதளங்களில் தனது இசை வீடியோக்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் இணையத்தில் தொடர்ந்து வைரலாக இருக்கும் லிடியன், தற்போது இசைஞானி இளையராஜா தன்னை சர்ப்ரைஸ் வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு பாராட்டிய ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து, ரசிகர்களை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

லிடியன் தனது வீடியோ அழைப்பின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, “சமீபத்திய இசை வீடியோக்களைப் பார்த்துவிட்டு MAESTRO இசைஞானி இளையராஜா அங்கிள் வீடியோ கால் மூலமாக பாராட்டினார், இது எனக்கு மற்றும் குடும்பத்திற்கு ஒரு உண்மையான மகிழ்ச்சியளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முதல் முறையாக இயக்கும் ‘Barroz – ‘Guardian of D’ Gama’s Treasure’ திரைப்படத்தின் மூலம் லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: ஜோதிகாவை தொடர்ந்து OTTயில் படத்தை வெளியிட தயாராகும் சித்தார்த்