இந்திய அணியில் புதுமுக வீரர்களாக அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு மஹிந்திரா தார் ஜீப்பை பரிசாக அளிப்பதாக மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி கடந்த நவம்பர் மாதம் முதல் டி20 தொடர், ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.

இந்திய அணியில் விராட் கோலி, அஸ்வின், பும்ரா உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் காயம் மற்றும் சொந்தக் காரணங்களுக்காக வெளியேறிய நிலையில், அனுமவமற்ற மற்றும் புதுமுக வீரர்களுடன் களமிறங்கி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வென்றதால் இந்திய அணியின் வீரர்கள் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றி இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரங்களாக உருவெடுத்திருக்கின்றனர் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் உள்ளிட்ட புது அறிமுகங்கள். வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுவிட்டு ஊர் திரும்பியிருக்கும் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரையும் ஹீரோக்களாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகிந்திரா இந்திய அணியில் புதுமுக வீரர்களாக அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், சுப்மன் கில் மற்றும் நவ்திப் சைனி என 6 வீரர்களுக்கு மஹிந்திரா தார் ஜீப்பை பரிசாக அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள பதிவில், “சமீபத்திய வரலாற்று சிறப்புமிக்க தொடரில் 6 இளைஞர்கள் அறிமுகமாகினர். சாத்தியமில்லாத விஷயங்களை கனவு காண்பதும், அதை சாத்தியப்படுத்துவதற்கும் இந்தியாவின் எதிர்கால தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இவர்கள் மாறியிருக்கின்றனர்.

உத்வேகம் அளித்திருக்கும் இந்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எனது சொந்த கணக்கில் மஹிந்திரா ஆல் நியூ தார் எஸ்யூவியை பரிசாக வழங்குவது எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சியை அளிக்கிறது” என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்தார்.

வெற்றிக் கோப்பையை தமிழக வீரர் நடராஜனிடம் கொடுத்து கவுரவித்த கேப்டன் ரஹானே!