ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின்போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர்.
ஆப்கானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றி இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர்.
அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி அறிவித்தனர். ஆப்கானின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஆப்கானில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா மசூதியில் இன்று (15.10.2021) பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றது. வெள்ளிக் கிழமை என்பதால் மசூதியில் தொழுகை நடத்துவதற்கு ஏராளமானோர் கூடியிருந்தனர். இதை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் 30க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் 70 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அங்கு மூன்று குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடந்ததாக குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு குறித்து உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சையத் கூறுகையில், “இமாம் பர்கா மசூதியில் நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பு எங்களைக் கவலையடையச் செய்துள்ளது. சிறப்புப் படையினர் குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதற்கான காரணம் விரைவில் கண்டெறியப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐஎஸ் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக கடந்த 8 ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் உள்ள குண்டூஸ் மாகாணத்தில், சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.