டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவிலிருந்து ஜேக் டோர்சி விலகியதை அடுத்து, புதிய சிஇஓவாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) பதவி வகித்தவர் ஜேக் டோர்சி. 45 வயதான டோர்சி, அவரது டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனமான ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.

இந்நிலையில் டிவிட்டர் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜேக் டோர்சி நேற்று (29.11.2021) திடீரென அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில், விரிவான கடிதத்தையும் பதிவு செய்துள்ளார்.

கடந்த ஆண்டே சிஇஓ பொறுப்பில் இருந்து ஜேக் டோர்சியை விடுவிக்க டிவிட்டர் நிறுவன பங்குதாரர் நிறுவனமான எலியட் மேனேஜ்மென்ட் முடிவு செய்தது. ஆனால், அவர்களுக்கிடையே இருந்த ஒப்பந்தம் காரணமாக, டோர்சியை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இரண்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஜேக் டோர்சி வகிப்பதை, எலியட் மேனேஜ்மென்ட் உரிமையாளர் பால் சிங்கர் எதிர்த்தார். அத்துடன், இரண்டில் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதன்படி டோர்சி நேற்று பதவி விலகி உள்ளார்.

இதனையடுத்து டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பராக் அகர்வால் (Parag Agrawal) டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பராக் அகர்வால் கடந்த 2011 ஆம் ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தில் மென்பொறியாளராக சேர்ந்தார். இதனிடையே டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப தலைவராக (CTO) இருந்த ஆடம் மெசிஞ்சர் அப்பதவியில் இருந்து விலகினார்.

இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு அப்பொறுப்புக்கு தலைவராக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார். பராக் அகர்வால், மும்பை ஐஐடி, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளார் மேலும் மைக்ரோசாப்ட், யாஹூ போன்ற நிறுவனங்களில் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக தன்னை நியமித்ததற்கு நன்றி தெரிவித்து டிவிட்டரில் பராக் அகர்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை பதவி தனக்கு கிடைத்த கவுரவம் எனவும் பராக் அகர்வால் கூறி உள்ளார்.