உயர் நீதிமன்ற ஆன்லைன் விசாரணையின்போது இளம்பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞர் தொழில் புரிய தடை விதித்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அவர் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் ஆன்லைன் காணொலி காட்சி வாயிலாக வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது, வழக்கு விசாரணைக்காக ஆன்லைனில் காத்திருந்த பெரம்பூர் செம்பியம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் திடீரென இளம்பெண் ஒருவருடன் ஒழுங்கீனமாக செயல்படும் வீடியோ காட்சி ஒளிபரப்பானது.
இதனால் காணொலியில் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதியும், சக வழக்கறிஞர்களும் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவியது.
இச்சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்து விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், “இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவாமல் முடக்கவும், இதுதொடர்பாக சிபிசிஐடி காவல்துறை வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
மேலும் இதுபோன்ற அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது, இச்சம்பவம் குறித்து பார் கவுன்சில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர். இதனையடுத்து அந்த வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
அதில், இதுதொடர்பான விசாரணை முடியும் வரை அந்த வழக்கறிஞர் எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகக்கூடாது என்றும், வழக்கறிஞராக தொழில் புரியக்கூடாது என்றும் தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு 23.12.2021 மீண்டும் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, அந்த வழக்கறிஞர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்த வழக்கறிஞர் ஜனவரி 20 அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.