அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படாது, தொலைக்காட்சியில் மட்டுமே வகுப்புகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று (ஜூலை.09) அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக அடுத்த கல்வியாண்டு தொடங்கியும், அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் வகுப்புகள் தொடங்கப்படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் வரும் 13ஆம் தேதி தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும், இதனை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைப்பார் என்று நேற்று (ஜூலை.08) அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
மேலும் வாசிக்க: கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கும் எட்டுமா அரசின் ஆன்லைன் வகுப்புகள்…
இதனையடுத்து ஆன்லைன் வழி வகுப்புகளை பெறக்கூடிய வகையில் அனைத்து மாணவர்களிடம் ஸ்மார்ட்போன், இணையவசதி உள்ளிட்ட கட்டமைப்பு இருக்குமா.. என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு இன்று (ஜூலை.09) விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலம் அல்லாமல் டிவி மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு சேனல் என்று 5 சேனல்களில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.