தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12ஆம் தேதி வரை அவகசாம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் இலவச கல்வி மற்றும் கட்டாய கல்விக்கான சட்டவிதியின் படி ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
கடந்த 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், கடந்தாண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த தேர்வு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த மார்ச் 15ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
இன்றுடன் (ஏப்ரல் 5) விண்ணப்பிக்கும் அவகாசம் முடியும் நிலையில், ஏப்ரல் 12 வரை அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணப்பிப்பதில் இடையூறு ஏற்பட்டது என பலர் புகார் கூறியதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வந்துள்ளது.
கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் நான்கு ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வை எதிர்கொள்ளலாம். இவர்கள் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்புப் பெறலாம்.
6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தாள்-2 தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப் படிப்புடன், இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தேர்வுக்கட்டணம்: எஸ்சி/எஸ்டி மற்றும் பவ்ட் பிரிவினருக்கு கட்டணம் :ரூ. 250, மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும். இதில் முதல் மற்றும் 2-ம் தாள் தேர்வுகளுக்கு தனித்தனியாக தேர்வுக்கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி (நீட்டிக்கப்பட்ட) நாள்: 12-04-2019
விண்ணப்பிக்கும் முறை: ஆசிரியர் தகுதித் தேர்வு (Tamilnadu Teachers Eligibility Test) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் தாள் -1, தாள்- 2 என்று தனித்தனியே விண்ணபிக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.