ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கிராம சபை கூட்டங்கள், ஜனவரி 26, குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம்,
மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி பிறந்த தினம் மற்றும் நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம் ஆகிய 6 நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கிராம சபை கூட்டத்தினை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும். உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம் நேரம் ஆகியவை கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை வரும் 22 ஆம் தேதிக்குள் அனுப்ப அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.