தமிழகத்தில் அறங்காவலர்கள் நியமனத்துக்குப் பிறகு கோயில்களில் உள்ள நகைகளை உருக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அரசு வெளியிட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள், புதிய அறிவிப்புகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுவருகிறது.
குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் பல முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் அர்ச்சனை, கோவில்களில் அன்னதான திட்டம்,
அதேபோல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்பது, இந்து அறநிலை துறையில் வரும் வருமானத்தை வைத்து கல்லூரிகள் அமைப்பது, பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்கி வருமானத்திற்கு வழி செய்வது என பல அதிரடி திட்டங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அறிவிப்புகளின் அடிப்படையில், கோயில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி, கட்டிகளாக மாற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து, இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை மற்றும் டி.ஆர்.ரமேஷ் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த மனுவில், கோயில்களின் தங்க நகைகளை உருக்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (28.10.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளின்படி, கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் தங்க நகைகளை உருக்க அனுமதிக்கக் கூடாது என, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோயில் நகைகளை உருக்கவில்லை என்றும், காணிக்கையாக வந்த நகைகள் தான் உருக்கப்படுவதாகவும், அதை மேற்பார்வையிட உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி இருவரும் அடங்கிய குழு அமைத்து, நகைகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் ஏற்கெனவே நகைகளை உருக்கிக் கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ததன் மூலம் 11.5 கோடி ரூபாய் வட்டி வருவாயாகக் கிடைத்துள்ளதாகவும், அது கோயில் நலனுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கோயில்கள் சீரமைப்புக்கு நிதி தேவைப்படுவதாகவும், கடந்த 11 ஆண்டுகளாக தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அறங்காவலர்கள் இல்லாமல் நகைகளை உருக்க முடியாது எனக் கூறினர்.
இதனையடுத்து, நகைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் எனக் குறிப்பிட்ட தலைமை வழக்கறிஞர், அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகே நகைகள் உருக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளைக் கணக்கெடுக்கலாம் எனவும், அறங்காவலர்கள் நியமிக்கும் வரை நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர். மேலும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மற்ற வழக்குகளுடன் சேர்த்து டிசம்பர் 15 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.