டிஆர்பி மோசடி வழக்கில், ரிபப்ளிக் தொலைகாட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கும், பார்க் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவுக்கும் நடைபெற்ற 500 பக்க வாட்ஸ்அப் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிஆர்பி மோசடி வழக்கில், மும்பை காவல் துறையினர் தாக்கல் செய்துள்ள 3600 பக்க கூடுதல் குற்றப் பத்திரிகையுடன், ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலின் (BARC) முன்னாள் தலைமை செயல் அதிகாரிக்கும், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கும் இடையில், வாட்ஸ்அப் மூலம் நடைபெற்ற உரையாடல் இணைக்கப்பட்டுள்ளது.
சுமார் 500 பக்கங்கள் கொண்ட இந்த உரையாடல், தற்போது கைது செய்யப்பட்டுள்ள பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவுக்கும், அர்னாப் கோஸ்வாமிக்கும் இருந்த நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.
அர்னாப் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு ஆதாரமாக பார்த்தோ தாஸ்குப்தா உடன் வாட்ஸ்அப் உரையாடல்களில் சில; பார்த்தோ தாஸுடன் நடந்த உரையாடலில் அர்னாப் கோஸ்வாமி, அரசு தரப்பில் தனக்கு நெருக்கம் இருப்பதை அடிக்கடி தெரிவித்துள்ளார். ஒரு இடத்தில் அனைத்து அமைச்சர்களும் நம்மோடு உள்ளனர் என்று அர்னாப் கோஸ்வாமி அவரிடம் கூறியுள்ளார்.
தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), டிஆர்பி தரவுகளை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார்த்தோ தாஸ்குப்தா கூறுகிறார். அதற்கு அர்னாப் கோஸ்வாமி, தான் அதை பார்த்துக் கொள்வதாக அவரிடம் பதில் அளித்துள்ளார்.
ஒரு உரையாடலின் போது, ரிபப்ளிக் தொலைக்காட்சியை விட பிற தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்துள்ளதை அர்னாப் கோஸ்வாமி சுட்டிக் காட்டுகிறார். அதற்கு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கும் பார்த்தோ தாஸ்குப்தா, ‘தரவுகள் அழிக்கப்படும்’ என்றும் கூறுகிறார்.
அதேபோல் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி நடந்துள்ள வாட்ஸ்அப் உரையாடலில், அர்னாப் கோஸ்வாமி ஒரு மிகப்பெரிய விஷயம் நடைபெறவுள்ளது என்று கூறுகிறார். அதற்கு தாவுத் இப்ராஹிம் தொடர்பானதா என்று பார்த்தோ தாஸ்குப்தா கேட்கின்றார்.
அதற்கு அர்னாப், பாகிஸ்தான் தொடர்பானது என்றும், இந்தமுறை மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளதாகவும் பதில் அளிக்கிறார். அதற்கு பார்த்தோ தாஸ்குப்தா, இந்தத் தேர்தல் சமயத்தில் அந்தப் பெரிய மனிதருக்கு இது சாதகமாக இருக்கும் என்றும், அவர் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார் என்றும் கூறுகிறார்.
அதன் பிறகு, இது வெறும் தாக்குதலா? அல்லது அதை விடப் பெரியதா? என்று பார்த்தோ தாஸ்குப்தா கேட்கின்றார். அதற்கு அர்னாப், வழக்கமான தாக்குதலை விட பெரியது என்றும், காஷ்மீர் தொடர்பான மிகப்பெரிய விஷயமும் கூட, என்று பதில் அளிக்கிறார்.
அத்துடன், பாகிஸ்தானைப் பொறுத்தவரை மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் தாக்குதல் அமையும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அர்னாப் கூறுகின்றார்.
அர்னாபுக்கும், பார்த்தோ தாஸ்குப்தாக்கும் இடையில் இந்த உரையாடல் நடைபெற்று மூன்று நாள் கழித்து, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி, இந்திய விமானப்படை, காஷ்மீரில் உள்ள இந்திய எல்லையை கடந்து, பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் உள்ள பாலகோட் நகரில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.
அதற்கு முன்னர் பிப்ரவரி 14 ஆம் தேதி, காஷ்மீரின் புல்வாமா பகுதியில், ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 46 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும், ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பே இந்தத் தாக்குதலை நடத்தியதாக கூறிய இந்தியா,
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாலகோட் தாக்குதலை நடத்தியதாக கூறியது. இந்த தாக்குதலின் போது தான் தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்த உரையாடல்களில் பார்த்தோ தாஸ்குப்தா, அடிக்கடி ‘AS’ என்ற குறியீட்டை பயன்படுத்தி, அவரிடம் தகவலை தெரிவியுங்கள் என்று அர்னாப்பிடம் கூறியுள்ளார். அர்னாப்பும் அவ்வாறே செய்துவிடுவதாக கூறியுள்ளது, பாஜகவின் தலைமையை குறிப்பிடுவதாக பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த உரையாடல்களின் முக்கிய பகுதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத்தொடர்ந்து #arnabgate #arrestarnabgoswami போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன.
PM Cares Fund சர்ச்சை; 100 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் காட்டம்