அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு அன்வய் நாயக் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ரிபப்ளிக் டிவி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் 306ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, கடந்த நவம்பர் 4 ஆம் தேதி அலிபாக் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பெரோஸ் சேக், நிதேஷ் சர்தா ஆகியோரையும் கைது செய்தனர்.
இதனையடுத்து அர்னாப் கோஸ்வாமி உட்பட 3 பேரையும் 14 நாட்கள் (நவம்பர் 18 ஆம் தேதி வரை) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது நீதிமன்றம். கொரோனா காரணமாக 3 பேரும் அலிபாக்கில் உள்ள பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி, பெரோஷ் ஷேக், நிதிஷ் ஷர்தா மூவர் தரப்பிலும் ஜாமின் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, எம்எஸ் கார்னிக் அமர்வில் நவம்பர் 7 ஆம் தேதி விசாரிக்கப்பட்டது. பின்னர் எந்த முடிவும் எடுக்காமல் வழக்கை நவம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 9) அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு ஆதாரம் அர்னாபுக்கு எதிராக பலமாக இருப்பதால் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. அதேநேரம் கீழ் நீதிமன்றத்தை நாடி ஜாமின் மனு தாக்கல் செய்யுமாறு மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே நேற்று (நவம்பர் 8) காலை பாதுகாப்பு காரணங்களுக்காக அர்னாப் கோஸ்வாமி தலோஜா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலால் அதிர்ச்சியான பாஜக அமைச்சர்கள் தொடர் புலம்பல்கள்