நாகர்கோவிலில் நரிக்குறவர்களை அரசு பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வள்ளியூரில் வசித்து வரும் நறிக்குறவர்கள் வழக்கமாக நாகர்கோவிலுக்கு வந்து செல்வார்கள். அவர்கள் குடிசைத் தொழிலாக செய்து வரும் ஊசி, பாசிகளை நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளிடம் விற்பது வழக்கம்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, நாகர்கோவிலில் இருந்து நெல்லை சென்ற அரசு பேருந்தில் பயணித்த குறவர் குடும்பத்தினரை பேருந்திலிருந்து நடத்துநர் கிழே இறக்கி விட்டு, அவர்களது உடைமைகளையும் தூக்கி வீசியுள்ளார்.
ஒரு குழந்தை, முதியவர், பெண் என 3 பேர் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சமூக பின்புலத்தைக் காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது. அனைவரும் சமம் என்ற கொள்கை உடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும் போது, அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. சுயமரியாதை, சமத்துவம் ஆகிய சமூக நீதிக் கொள்கைகளை அனைவருமே நெஞ்சில் ஏந்த வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோதங்கராஜ் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், நரிக்குறவர்களை நடுவழியில் பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட புகாரில் அந்த பேருந்தின் ஓட்டுநர் நெல்சன், நடத்துநர் ஜெயதாஸ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
முன்னதாக சில தினங்களுக்கு முன்னர், கன்னியாகுமரி பகுதியில், துர்நாற்றம் வீசுவதாக கூறி மீன் விற்கும் மூதாட்டி ஒருவரை அரசு பேருந்து நடத்துநர் பேருந்திலிருந்து இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.
மகளிர் மேம்பாட்டுக்காக கட்டணமில்லா உரிமைச் சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது என தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், நேர காப்பாளர் ஜெயக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.