தமிழக அரசின் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினால் அரசு நடவடிக்கை எடுக்கும்; நீதிமன்றம் அல்ல என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ராஜபாளையம் அருகே தர்மாபுரம் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் 32 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

உரிய பாதுகாப்பு, சமூக இடைவெளி பின்பற்றி இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு அனுமதியளிக்க கோரி, பல்வேறு அதிகாரிகளிடம் நேரில் சென்று மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. எனவே, ஆகஸ்ட் 21, 22ம் தேதி விழா நடத்துவதற்கு அனுமதியளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு ஆகஸ்ட் 18ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, கொரோனா தாக்கம் உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தினந்தோறும் 6,000 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் மனுதாரர் எவ்வாறு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்கிறார்? இதில் எவ்வாறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதிக்க முடியும்? இதனால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

இந்த மனு தேவையில்லாத ஒன்று. இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். எனவே மனுதாரர் மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்க நேரிடும் என நீதிபதி தெரிவித்தார்.

இந்த மனு இன்று (ஆகஸ்ட் 19) மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு ஏற்கனவே விநாயகர் சிலை வைத்து வழிபட தடைவிதித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்தனர்.

மேலும், அரசின் தடை உத்தரவை மீறுவோம் என இந்து முன்னணியின் மிரட்டல் குறித்து மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டியபோது நீதிபதிகள் குறுக்கிட்டு, இதுபோன்ற மிரட்டல்களிலிருந்து அரசை பாதுகாப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை, அரசு உத்தரவுகள் மீறப்பட்டால் அதை தமிழக அரசு கவனித்து கொள்ளும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் வாசிக்க: அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலை- இந்து முன்னணி எச்சரிக்கை