அதிமுக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேனி, ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் பாதுகாப்பில் அக்கறை இல்லாதவர்கள் என்று எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
 
தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஒபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், சட்டமன்ற வேட்பாளர்களான லோகிராஜன் (ஆண்டிபட்டி), மயில்வேல் (பெரியகுளம்) மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரத்தில் நேற்று காலை நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசிய விவரம் பின்வருமாறு :
 
ஜாலியன் வாலாபாக் கொடூரம் நடந்த 100வது ஆண்டான இன்றைய தினத்தில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
 
இலங்கையில் இருக்கும் தமிழ் சகோதரர்களின் வளமான வாழ்வுக்கு நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். பாதுகாப்பு என்று வரும்போது சமாதானம் செய்து கொள்ள தயாராக இல்லை. நான் மக்கள் காவலாளி. உஷாராக இருக்கிறேன்.
 
தமிழகத்தை சேர்ந்த விமானி பாகிஸ்தானில் சிக்கியபோது பத்திரமாக மீட்கப்பட்டார். அதைச் சொன்னால் நான் அரசியலாக்குவதாக கூறுகின்றனர். அவர் மீட்கப்படாமல் இருந்தால் இவர்கள் என்ன சொல்வார்கள்?
 
மதுரை – போடி அகல ரயில்பாதை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படும். மதுரை விமான நிலையம்விரிவாக்கப்படும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. மதுரையில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்கப்பட்டு வேலை வாய்ப்பு தரப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு தகுந்த விலை வழங்கி இருக்கிறோம்.
 
எனக்கு இப்பகுதியின் நீர்ப்பாசன பிரச்னை பற்றி நன்றாக தெரியும், கங்கையைப்போல வைகை நதியையும் சீர்படுத்த நினைக்கிறோம். ஒவ்வொரு கடினமான நேரங்களிலும் நான் உங்களோடு நிற்கிறேன். இந்த பகுதியிலிருந்து சபரிமலை, சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் செல்ல வசதிகள் தேவைப்படுகிறது. இதனை நிறைவேற்ற வேண்டும். வளர்ச்சித்திட்டங்களை சரியான திசையில் நாங்கள் கொண்டு செல்கிறோம். புதிய இந்தியாவை படைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
 
கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
 
 

தேனி கூட்டத்தில் தேனி, மதுரை மக்களவை அதிமுக வேட்பாளர்களான ஓ.பி.ரவீந்திரநாத்குமார், ராஜ்சத்யன் ஆகியோர் பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கினர். தொடர்ந்து ஒவ்வொரு வேட்பாளரும் மோடியின் காலில் விழுந்து எழுந்தனர்.

ஆனால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் காலில் விழவில்லை. அதிமுக, பாமக, தேமுதிக வேட்பாளர்கள் மட்டுமே மோடியின் காலில் விழுந்து கும்பிட்டனர்.
 
பின்னர் ராமநாதபுரம் மக்களவைத்தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன், திருநல்வேலி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன், பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகர் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் விவரம் பின்வருமாறு :
 
2019ல் உள்ள இந்தியா 2014ஐ விட மாறுபட்டது. ஏழ்மையை வெளியேற்றியுள்ளோம். ஏழைகளுக்கு வங்கி கணக்கு, எரிவாயு சிலிண்டர் வழங்கி தாய்மார்களுக்கு புகையில்லா சமையலறை கொடுத்துள்ளோம். சுகாதார நிலையை 38 சதவீதத்தில் இருந்து 98 சதவீதத்திற்கு எடுத்து சென்றுள்ளோம்.
 
மருத்துவக்காப்பீடு இல்லாமல் இருந்தவர்களுக்கு குறைந்த விலையில் தரமான மருத்துவம் கிடைக்க செய்துள்ளோம். ராமேஸ்வரம், தனுஷ்கோடி இடையே ரயில் பாதை வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. 100ஆண்டு கடந்த பாம்பன் பாலம் உதாரணமான பாலமாக மாற்றப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் நீர் வசதி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மே 23ல் மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் தண்ணீருக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும். கடுமையாக உழைக்கின்ற மீனவர்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வரப்படும்.
 
விவசாயிகளைப் போல் மீனவர்களுக்கும் அட்டை வழங்கப்படும். விஞ்ஞானத்தின் மூலம் மீனவர்கள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
கடலில் எல்லை எச்சரிக்கை இல்லாததால் கைதான 1,900 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தூக்கு தண்டனையில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர். துறைமுக கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம், மீனவர்கள் பிரச்னைகளை தீர்க்க முடியும். துறைமுகம் மூலம் நாடு வளர்ச்சியடையும் என எங்கள் கூட்டணி நம்புகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அழிவிற்கு எடுத்து செல்கின்றனர்.
 
மோடியை வெறுக்கிறோம் என்று கூறிக்கொண்டு நாட்டை வெறுக்கின்றனர். நாட்டில் இருக்கும் அமைப்புகளை அவமானப்படுத்துகின்றனர். நாம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினால் அவர்கள் ராணுவத்தை அவமானப்படுத்துகின்றனர்.
 
நாட்டின் பாதுகாப்பில் எதிர்கட்சிகளுக்கு அக்கறை இல்லை; அவர்களால் நாட்டை முன்னேற்ற முடியாது. நமது பண்பாடு பெண்களின் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இஸ்லாமிய பெண்களுக்கு முத்தலாக் முறையால் அநீதி இழைக்கப்படுகிறது. ஆனால் அதற்கான மசோதா கொண்டு வரப்படும்போது எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனர். சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட்கள் அபாயகரமான விளையாட்டை விளையாடுகிறார்கள். நம் உரிமையை, நம்பிக்கையை அழிக்கின்றனர்.
 

சமூக வலைதளத்திலே பரவி வரும் பாஜகவின் குடும்ப அரசியல் படம்

இந்தியா ஒரே நாடு. வேற்றுமையில் ஒற்றுமை இருப்பது நமது பலமாகும். வடக்கு, தெற்கு மோதலுக்கு காங்கிரஸ் முயற்சி செய்கிறது. எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் அதிகமான வரி விதிப்பு, குறைவான முன்னேற்றம் மட்டுமே நடக்கும். தற்போது நாட்டிற்கு ஸ்திரமான, வலிமையான அரசு தேவை. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு, ஈஸ்டர் வாழ்த்துக்கள்.
 
ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியின் பேச்சை எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்தார். ஏற்கனவே மோடி என்ன பேசப்போகிறார் என டைப் செய்த பேச்சு எச்.ராஜாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் ஏராளமான இடங்களில் திணறினார். ‘இஸ்ரோ’ என்பதை ‘இஸ்ரேல்’ என்று கூறினார்.
 
தேனி பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இங்குள்ள குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார். இதைக் கேட்டதும் மேடையில் அமர்ந்திருந்த துணை முதல்வர்
 
ஓ.பன்னீர்செல்வத்தின் முகம் வெளிறி அதிர்ச்சிக்குள்ளானார். ஏனென்றால், தேனி தொகுதியில் போட்டியிடும் அவரது மகன் ரவீந்திரநாத்குமாரும், மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யனும் கும்பிட்டபடி பின்னால் நின்று கொண்டிருந்தனர்.