பொறியியல் படிப்புகளில் சேர நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023-24 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு B.E, B.Tech, B.Arch பட்டப்படிப்பில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள், தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏதுவாக பொறியியல் சேர்க்கை சேவை மையம் TNEA Facilitation Centers (TFCs) அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய தொடங்கும் நாள்: 05.05.2023 இறுதி நாள்: 04.06.2023
பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking / UPI இணையதள வாயிலாக செலுத்தலாம்.

இணையதள வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள், “The Secretary TNEA” payable at Chennai. என்ற பெயரில் 05.05.2023 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக் கட்டணமாக பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்.

OC, BC, BCM, MBC & DNC பிரிவினருக்கான பதிவுக்கட்டணம் ரூ.500, SC, SCA, ST பிரிவினருக்கான பதிவுக்கட்டணம் ரூ.250.

கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்காணும் இணையதள வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ளலாம்.

இணையதளம் வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும் பொழுதே அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும்பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) மையத்தினை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.

மேற்கண்ட அசல் சான்றிதழ்களை இணையதள வாயிலாக சரிபார்க்கும்போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அந்த குறிப்பிட்ட மாணாக்கரின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் TFC மையத்திற்கு நேரடியாக வந்து சரிசெய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நேரடியாக நடைபெறும்.

மேலும் B.E., B.Tech (Lateral Entry and Part Time) பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.