தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு (வயது 72) கொரோனாவால் சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு அரசியில் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 13-ம் தேதியன்று சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு விழுப்புரம் அருகே சென்றுகொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் உயர் சிகிச்சைக்காக அக்டோபர் 14-ம் தேதியன்று சென்னை அழைத்துவரப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 17 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (அக்டோபர் 31) இரவு காலமாகிவிட்டார்.
அமைச்சரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவேரி மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸ் அருகே வைக்கப்பட்ட துரைக்கண்ணு உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர் சந்திப்பில், “அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு தமிழ்நாட்டுக்கும், அதிமுகவுக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது” என்று கூறினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் திரு. ஆர்.துரைக்கண்ணு அவர்கள் மறைவெய்திய அதிர்ச்சிச் செய்தி கேட்டு பெருந்துயருற்றேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு வகித்த பதவி யாருக்கு என்ற போட்டி அதிமுகவில் தொடங்கிவிட்டது. துரைக்கண்ணு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே அவர் வகித்து வந்த துறையை அதே சமூகத்தைச் சேர்ந்த சட்டத்துறை அமைச்சராக இருக்கும் சி.வி.சண்முகத்திடம் வழங்கவேண்டும் என ஒரு பிரிவினர் கூறிவருகின்றனர்.
மற்றொருபுறம் அமைச்சர் வாழ்ந்த டெல்டா பகுதிக்குள் தான் பதவி கைமாற வேண்டும் என சிலர் கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டனர். துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மூலம் பேராவூரணி எம்.எல்.ஏ கோவிந்தராஜ், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சேகர் ஆகியோரும் அமைச்சர் பதவிக்கு போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் அவரையும் இந்த ரேஸில் இணையுமாறு வற்புறுத்தி வருகின்றனர். இது அதிமுகவினரிடையே மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.
மறைந்த துரைக்கண்ணு அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே கட்சியில் உள்ளார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் அவருக்கு செல்வாக்கு இருந்த காரணத்தினாலேயே பாபநாசம் தொகுதியிலிருந்து மூன்று முறை தொடர்ந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.துரைக்கண்ணுக்கு 2016ஆம் ஆண்டு முதன்முறையாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது… தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு