அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைகழகத்தில் நடைபெறும், தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழாவில் காலா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படங்களும், கக்கூஸ் என்ற ஆவணப்படமும் திரையிடப்படுகின்றன.
அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைகழகத்தில் முதல்முறையாக ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019’ நடைபெற இருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த அம்பேத்கர் சர்வதேச சங்கத்தால் நடத்தப்படும் இந்த விழாவில், உலக அளவில் பலமொழி திரைப்படங்களும் கலந்து கொள்கின்றன.
பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடைபெறும் இந்த விழாவில், தமிழ் சினிமாவில் இருந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘காலா’, மற்றும் அவர் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ ஆகியவை திரையிடலுக்குத் தேர்வாகி உள்ளன. இதனுடன் திவ்யபாரதி இயக்கிய கக்கூஸ் என்ற ஆவணப் படமும் திரையிடப்படுகிறது.
இதில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித், சாய்ரத், ஃபான்றி படங்களை இயக்கிய மராத்தி இயக்குனர் நாகராஜ் மஞ்சுலே மற்றும் நடிகை நிஹாரிகா சிங் ஆகியோர் இந்தியாவில் இருந்து கவுரவிக்கப்படுகிறார்கள்.
மேலும், நீரஜ் கேவானின் ‘மாஸான்’, ஜெயன் கே.செரியனின் ‘பபிலியோ புத்தா’, நாகராஜ் மஞ்சுளேவின் ‘ஃபண்ட்ரி’ மற்றும் சுபோத் நாகதேவின் ‘போலே இந்தியா ஜெய் பீம்’ ஆகிய படங்களும் இந்த விழாவில் திரையிடப்படுகிறது.