அமெரிக்க அதிபரின் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒரு குழப்பமான முழுமையான பேரழிவுக்கு கொண்டுசென்றுள்ளதாக முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா . இதுவரை அமெரிக்காவில் 13.49 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, அதில் 80 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர். சுமார் 2.38 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் கொரோனா குறித்த கருத்துக்களை மாறி மாறி கூறி வருவதும் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது என கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் கொரோனா ஒரு அச்சுறுத்தல் கிடையாது எனவும் அது விரைவில் மறைந்து விடும் எனவும் தெரிவித்தார், ஆனால் மார்ச் மாத நடுவில் கொரோனா பாதிப்பின் தீவிரத்தை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் அவர் கொரோனாவை தடுக்க கிருமி நாசினியை ஊசி மூலம் செலுத்தலாம் எனத் தெரிவித்து மருத்துவ நிபுணர்கள் எதிர்ப்புக்குப் பிறகு அது வெறும் நகைச்சுவைக்காகச் சொன்னது எனச் சமாளித்தார். கடந்த வாரம் கொரோனா எதிர்ப்பு படையை கலைக்கப் போவதாகத் தெரிவித்த டிரம்ப் அதன் பிறகு பொருளாதார மேம்பாட்டுக்காக கூறியதாக தெரிவித்தார்.
மேலும் வாசிக்க: மோடியின் அரசை புறக்கணிக்கிறதா அமெரிக்கா..
தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பலர் பணிக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் சுகாதார அதிகாரிகள் ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா பரவுதல் மேலும் தீவிரமாகும் என எச்சரித்துள்ளனர்.
இது குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடனுக்கு ஆதரவு தெரிவித்து ஒபாமா தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதில் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுடன் பணியாற்றிய ஊழியர்கள் அமைப்பு, ஒபாமாவுடன் உரையாடிய காணொலி 30 நிமிட நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. அதில் ஒபாமா, “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவின் போக்கு மிகவும் மோசமாக உள்ளது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் அதிபர் ட்ரம்புக்கு தெரியவில்லை. தொடக்கத்திலிருந்தே கொரோனா வைரஸ் குறித்த புரிதல் இல்லாமல் பேசி வந்தார். ஒரு நல்ல அரசையும் மோசமாக மாற்றும் அளவுக்கு ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
சிலர் இதில் சுயநலமாக செயல்படுகிறார்கள். கொரோனா மூலம் நமக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். நாம் எவ்வளவு பெரிய நாடாக, அரசாக இருந்தாலும் கூட இந்த மனநிலையுடன் செயல்பட்டால் வெற்றிபெற முடியாது.
இந்த நடவடிக்கைகள் குழப்பமான முழுமையான பேரழிவில் முடிந்துள்ளது. இந்த பெருந்தொற்றை சமாளிக்க அமெரிக்காவுக்கு வலிமையான தலைமை தேவை. இதனால் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் நான் ஜோ பிடனுக்கு ஆதரவு தெரிவிக்க எண்ணுகிறேன்” என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.