நாடு முழுவதும் வரும் மே 12 ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக, டெல்லியில் இருந்து மும்பை. பாட்னா, அகர்தலா, அகமதாபாத், திருவனந்தபுரம், பெங்களூரு, சென்னை உள்ளி்ட்ட நாட்டின் முக்கிய 15 நகரங்களுக்கு இயக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

மே 12ம் தேதி டெல்லியில் இருந்து இயக்கப்பட உள்ள 15 நகரங்கள்: சென்னை, பெங்களூரு, செகந்திராபாத், அகர்தலா, மும்பை, பாட்னா, புவனேஸ்வர், திருவனந்தபுரம், அகமதாபாத், ஜம்மு தாவி, திப்ரகார்க், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, மடகோன்.

இதற்கான முன்பதிவு நாளை மே 11 மாலை 4 மணி முதல் ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு டிக்கெட்களை பெற முடியும். ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுன்ட்டர்கள் திறந்திருக்காது. கவுன்ட்டர்களில் நடைமேடை டிக்கெட் உள்பட எந்த டிக்கெட்டும் வழங்கப்படாது.

மேலும் வாசிக்க: திங்கட்கிழமை முதல் எவையெல்லாம் இயங்கும்: தமிழக அரசு

முன்பதிவு டிக்கெட் வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

ரயில் அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்கள், ரயில் பயணத்தின்போது, பயணிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.