இந்திய பெருங்கடல் தீவு நாடான மாலத்தீவில், கடந்த 23ந்தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் அப்துல்லா யாமீன் வெற்றி பெறுவார் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவர் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அதிபர் முகமது நஷீத்தின், மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சொலி அமோக வெற்றி பெற்றார்.இவர் வெற்றி பெறுவதற்கு கயூம் சார்ந்த கட்சி உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவாக செயல்பட்டன.

முன்னதாக மாலத்தீவின் முன்னாள் அதிபராக இருந்த மவுமூன் அப்துல் கயூம் (வயது 80) மற்றும் அவரது மகனான பரீஸ் மவுமூன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதற்கு எதிராக அவர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்ராகிம் முகமது சொலி, சிறை கைதிகளாக உள்ள அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களையும் விடுவிக்கும்படி அதிபராக உள்ள அப்துல்லா யாமீனை வலியுறுத்தினார்.

இந்நிலையில், மாலத்தீவிலுள்ள உயர் நீதிமன்றம் ஒன்று மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்கயூம் மற்றும் அவரது மகன் பரீஸ் மவுமூனை ஜாமீனில் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டது.

இதனை அடுத்து அவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.