கொரோனா வைரஸ் நிதிஉதவிகள் என்கிற பெயரின் கீழ் போலியான PM cares Fund லிங்க்களை பயன்படுத்தி மக்களிடம் பணம் பறிப்பதாக மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம் PM cares fund என்கிற பெயரின் கீழ் நிதி உதவிகளை கோரியதும், அதனை கருத்தில் கொண்டு பெரும்பாலான மக்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வரும் நிலையில், மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சிகரமான தகவலொன்றை வெளிப்படுத்தி உள்ளனர்.
அதாவது, ஆன்லைன் வழியாக மோசடி செய்யும் ஆசாமிகள் பொது மக்களை ஏமாற்றும் நோக்கத்தின் கீழ், பிரதமரின் கொரோனா வைரஸ் நிதிஉதவிகள் என்கிற பெயரின் கீழ் பல போலியான PM cares fund லிங்க்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். இதுபோன்ற பல போலி PM cares fund இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளன என்று கூறினர்.
மேலும் கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான நிதி நன்கொடையை வழங்க pmcares@sbi என்ற உண்மையான இணைப்பை பயன்படுத்துமாறும் அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டனர். இது தவிர்த்து கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழியாக தவறான தகவல்களை பரப்பிய குற்றத்திற்காக 78 வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும் மகாராஷ்டிரா சைபர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்றொருபுறம், ஆன்லைனில் கேம் விளையாடுயாடுவதால் பணம் திருடப்படுவதும் நடக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் கேம் விளையாடுவது அதிகரித்துள்ளது. திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலுவின் மகள் மனோன்மணி, தனது டெபிட் கார்டிலிருந்து 1.50 லட்சம் ரூபாய் மாயமாகியுள்ளதாகவும், அதனை திரும்பப் பெற்றுத் தர வேண்டுமெனவும் சென்னை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஏப்ரல் 9 அன்று புகார் அளித்துள்ளார்.
விசாரித்ததில் மனோன்மணியின் மகன் டெபிட் கார்டை உபயோகித்து ஆன்லைனில் கேம் விளையாடியதில் அவர் உபயோகித்த கார்டிலிருந்து 1.50 லட்சம் ரூபாய் திடீரென மாயமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மனோன்மணி, உடனடியாக காவல் துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி போன்ற குற்ற சம்பவங்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக கூறும் காவல் துறையினர், அதே சமயம் ஓயிட் காலர் கிரைம் எனப்படும் தொழில்நுட்பக் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். எனவே டெபிட் கார்டு போன்ற தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பணம் சம்பந்தமாக வரும் மெயில், குறுஞ்செய்திகளை கவனமாகக் கையாள வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்கள்.