’21 ஆம் நூற்றாண்டின் அடையாளச் சின்னம்’ என்ற விருதுக்கு, இந்தியாவைச் சேர்ந்த பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத் தேர்வாகி உள்ளார்.

லண்டனைச் சேர்ந்த ஸ்கெயர்டு வாட்டர்மெலன் கம்பெனி ஆண்டுதோறும், சிறந்த ஆளுமைகளை ஊக்குவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில், 21 ஆம் நூற்றாண்டின் அடையாளச் சின்னம் என்ற விருதுக்கு,

இந்தியாவைச் சேர்ந்த பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான விருது வரும் 10 ஆம் தேதி வழங்கப்பட உள்ளதாக பாரதிய கிசான் சங்கத்தின் உத்தரப் பிரதேச துணைத் தலைவர் ராஜ்பீர் சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து ராகேஷ் திகைத் கூறுகையில், “தற்போது போராட்டத்தில் பங்கேற்றிருப்பதால் விருது பெறுவதற்காக லண்டன் செல்ல மாட்டேன். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதும் விருதை ஏற்றுக்கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்களை ஒருங்கிணைப்பதில் ராகேஷ் திகைத் முக்கிய பங்காற்றினார். தங்கள் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் குறித்த தகவலை தொடர்ந்து பத்திரிகைகள் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்தி ஆதரவு திரட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.