தமிழ்நாட்டில் இன்று (6.1.2022) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், வரும் 9.1.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உலக அளவில், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பரவி வருகிறது.

இந்தியாவில், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், புது டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கம், புது டெல்லி, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வேகமாகப் பரவி வரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில், முதலமைச்சர் அவர்களது வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா நோய்த் தொற்று வெகுவாகக் குறைந்து 27.12.2021 அன்றைய நாளில் 605 ஆக இருந்தது. பொது இடங்களில் கொரோனா நோய்த் தடுப்பு நடைமுறைகளை முறையாக கடைபிடிக்காததன் காரணத்தினால் தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து 3.1.2022 அன்று 1728 ஆக உள்ளது.

இந்நிலையில், கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தத் தவறினால் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 4.1.2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., கொரோனா மேலாண்மைக் குழுவின் தலைவர் ஆர்.பூர்ணலிங்கம், இ.ஆ.ப., (ஓய்வு) மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் பின்வரும் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்படுகிறது.

மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.

எனினும், இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது பின்வரும் அத்தியாவசியச் செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.

பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.

பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது.

9-1-2022 அன்று முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.

இதர கட்டுப்பாடுகள்:

மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.

அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.

அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

பொது பேருந்துகள் மற்றும் புறநகர் இரயில்களில் உள்ள இருக்கைகளில், 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது.

அனைத்து பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Parks / Amusement Parks) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

மீன் மற்றும் காய்கறிச் சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களிலிருந்து செல்லும் பேருந்துகளை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வேறு இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை மற்றும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அனைத்து சேவைத் துறைகள் போன்ற பொது மக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள், உரிமையாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் 9.1.2022-க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி, அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேரப் பணிக்குச் செல்லும்போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்றிதழையும் வைத்துக்கொள்ளவேண்டும்.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் ஊரடங்கு கட்டுப்பாட்டிற்குட்பட்டு அனுமதிக்கப்படும்.

உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கேளிக்கை விடுதிகளில் (Clubs) உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

அனைத்து திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பயிற்சியும், 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.

அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.

அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) போன்றவை ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்:

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (Hand Sanitizer with Dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (Thermal Screening).

கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.

அனைத்து கடைகளும் குளிர் சாதன வசதியை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், பின்வரும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தீவிரமாக நோய்த் தொற்றுப் பரவலை வீடு வீடாகக் கண்காணிக்க குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படும்.

கொரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்.

தற்போது கொரோனா நோய் வேகமாக பரவி வருவதால், பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் கொரோனா நோய்த் தடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் / கடைகளை மூட பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறும், கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கண்டிப்பாகக் கடைபிடிக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், மாவட்ட நிருவாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசியினை கட்டாயம் செலுத்திக் கொள்ளுமாறு பொது மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு உங்கள் அனைவரையும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.