சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க அதிமுக தொண்டர்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஓடும் பேருந்திலேயே அதிமுக தொண்டர்களுக்கு பணம் விநியோகம் செய்தது தெரியவந்தது.

நந்தனத்தில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமாக அதிமுக தொடர்கள் பேருந்துகள், வேன்கள், பள்ளிவாகனங்கள் என போக்குவரத்து வசதி மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.

இதன் காரணமாக அண்ணா சாலை முழுவதுமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்கள், எவ்வளவு பேரை அழைத்து வரவேண்டும் என ஏற்கனவே திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் பணம் கொடுத்து தான் இவர்கள் அழைத்து வரப்படுகிறாக்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வந்த நிலையில் சற்று முன்னர் அண்ணா சாலையில் ஓடுகிற பேருந்திலேயே பணப்பட்டுவாடா நடைபெற்றது. இதே போல பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வரப்படும் நபர்களுக்கும் பணப்பட்டுவாடா சரளமாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் நடைபாதையில் உயர் நீதிமன்ற அறிவிப்பை மீறி சாலை இருபுறத்திலும் பானர்கள் வைத்து உள்ளதால் போலிசார் போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

ஒருபுறம் பணம் மறுபுறம் மது என தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்பட்டு வருவதாகவும்தகவல் வெளியாகியுள்ளது. வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பேருந்துகளில் சென்னைக்கு ஒரே நேரத்தில் வந்த அதிமுக தொண்டர்களின் வாகனங்ககளை எங்கே நிறுத்துவது என அறிவிக்கப்படாததால் சாலை ஓரங்களிலேயே நிறுத்தியதால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.இதனால் பலரும் வெளிப்படையாக அதிமுக அரசை திட்டியபடியே சென்றனர்