டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட சென்ற மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 6 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
டெல்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் பட்டமேற்படிப்பு படித்து வருகின்றனர்.
ஒன்றிய பாஜக அரசு ஆட்சி அமைத்தபிறகு, 3 முறை தீவிரவாத காரணங்களுக்காக தடைசெய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களை பல்கலைக்கழக துணைவேந்ததராக நியமனம் செய்து வருகிறது.
இதன் காரணமாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் பல்வேறு மக்கள் விரோத திட்டங்களுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கமாக இருக்கும் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷித் (ஏபிவிபி) சேர்ந்தவர்கள், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மேலும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷித் (ஏபிவிபி) அமைப்பை சேர்ந்த மாணவர்கள், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மற்ற வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது தொடர்ச்சியாக வன்முறையை கையாண்டு வருகின்றனர்.
உதாரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு இரவு நேரத்தில் விடுதிக்குள் நுழைத்த ஏபிவிபி அமைப்பனர் அங்கிருந்த மாணவர்களை கொடூர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் தற்போது ஏபிவிபி உறுப்பினர்கள் ராம நவமி எனக் கூறி, பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவுகளை வழங்க விடாமல் தடுத்து வன்முறைத் தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலில் 6 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஏபிவிபியினர் விடுதி செயலாரையும் தாக்கி உள்ளனர். இரவு உணவு மெனுவை மாற்றவும், அதில் அனைத்து மாணவர்களுக்கும் வழக்கமாக வழங்கப்படும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மெஸ் கமிட்டியை வற்புறுத்தி ஏபிவிபியினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து இச்சம்பவத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மேலும் தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு மாணவர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு காவல்துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை துணை ஆணையர்(தென்மேற்கு) மனோஜ் சி கூறுகையில், ” இங்கு ஒரு வன்முறை நடந்துள்ளது. தற்போது எந்த பிரச்சினையும் இல்லை.
இங்கு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். இங்கு அமைதியை நிலைநாட்ட முயற்சிக்கிறோம். இந்த கலவரத்தில் இருதரப்பில் இருந்தும் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.