அக்டோபரில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளதால் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், பல்வேறு தளர்வுகளை அரசு அமல்படுத்தியதால், பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். திரையரங்குகள், கடற்கரைகள், மீன் மார்க்கெட்டுகள் ஆகியவை கட்டுப்பாடின்றி திறக்கப்பட்டதால் மக்களின் கூட்டம் பெருக்கெடுத்தது.
ஆனால், இந்த இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பதில்லை. குறைந்தபட்சம் முகக் கவசம் கூட அணிவதில்லை. இதனால், கொரோனா மூன்றாவது அலை பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று உயர தொடங்கியுள்ளது. 16.09.2021 நிலவரப்படி 1,693 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை கொரோனாவால் 26 லட்சத்து 40 ஆயிரத்து 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் 25 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,271 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கும் சென்னை மாநகராட்சிக்கும் புகார்கள் குவிந்துள்ளன. இதனால் சில தீவிர கட்டுப்பாடுகளை சென்னைக்குள் அமல்படுத்தலாமா என்று மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் அக்டோபரில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளதால் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 1,500 முதல் 1,600 க்குள் பதிவாகி வரும் நிலையில், அக்டோபர் மாதம் இந்த நிலை மாறக்கூடும். எனவே மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.