ஹிஜாப் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறும் எவரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வர அம்மாநில பாஜக அரசு தடை விதித்தது.

இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்த வழக்கில் பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள ஆடைகளை அணிய தடை விதித்த அரசின் உத்தரவு செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் இன்று (28.3.2022) தொடங்கி உள்ளன. இந்த தேர்வுகளை, 8.69 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.

இந்த தேர்வுகளில் பங்கேற்பவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இருப்பினும் ஹிஜாப் தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எஸ்.எஸ்.எல்.சி.தேர்வைப் புறக்கணிப்பதாக இஸ்லாமிய மாணவிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஹிஜாப் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறும் எவரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் எச்சரித்துள்ளார்..

ஹிஜாப் விவகாரத்தில் அரசு விதிகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், எந்த பள்ளி மாணவியும் இதுபோன்ற விஷயங்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே கருத்தை வலியுறுத்தி உள்ள கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, விதிகளை மீறும் எவரும் நடவடிக்கை சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மாண்டியா தொகுதி சுயேச்சை எம்.பி., சுமலதா அம்பரீஷ், “ஹிஜாப் விவகாரத்தில் கல்வி தொடர்பான உங்கள் முன்னுரிமைகளை நீங்களே தீர்மானிக்க வேண்டும். ஹிஜாப் அணிய அனுமதிக்கும் நிறுவனத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்” என்றும் முஸ்லிம் மாணவிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.