இஸ்லாமிய சமுதாயத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியப் பழக்கமில்லை. எனவே, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், பெங்களூருவில் ஒரு வாரம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஒரே சீருடை சட்டம் அமல்படுத்தியதால், உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வரவேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்தக் கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்ததற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் ஹிஜாப், பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியது.

இதனையடுத்து பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து வரவேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டது. கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ண தீக்சித் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விரிவான அமர்வு விசாரிக்கும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து இவ்வழக்கை கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவத்கியும் வாதிட்டனர்.

மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் தேவதத் காமத், ரவிவர்ம குமார் ஆகியோரும், உடுப்பி பி.யூ. கல்லூரி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.எஸ்.நாகனந்த்தும் வாதிட்டனர். மனுவை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பு வரும் வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்லத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று (15.3.2022) தீர்ப்பு அளித்துள்ளது. அதில், “ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையின்படி அத்தியாவசிய பழக்கம் இல்லை. ஆகையால் கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு என மத அடையாளங்களைத் தாங்கி வர தடை விதித்து பிப்ரவரி 5, 2022ல் விதிக்கப்பட்ட தடை செல்லும்.

பள்ளிச் சீருடை என்பது சட்டபூர்வமானதே. அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே. அது பேச்சு உரிமை, தனிநபர் உரிமை என அரசியல் சாசன உரிமைகள் எதையும் பறிப்பதாகாது. பிப்ரவரி 5,,2002ல் கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். உடுப்பி அரசு பி.யூ. கல்லூரி நிர்வாகிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முகாந்திரம் இல்லை” என்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் ஹிஜாப் குறித்த பல்வேறு மனுக்களையும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தீர்ப்பை ஒட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும், கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் மார்ச் 21 ஆம் தேதி வரையிலும் பொது இடங்களில் மக்கள் பெருமளவில் கூடும் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூருவில் ஒரு வாரம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடுப்பி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.