கர்நாடகா மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கிருந்து 2 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மேலணையில் உள்ள 45 மதகுகளில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், ஆற்றில் சுமார் 90 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. மதகு உடைப்பை அடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அணையின் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை அடுத்து திருச்சி ஆட்சியர் ராசாமணி அங்கு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர், ‘மதகுகள் உடைந்திருந்தாலும் நீர் திறப்பு குறைவு என்பதால் கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும், நாளை மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, மறு சீரமைப்பு பணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மழை மற்றும் நீர் வரத்து அதிகம் வரும் என்று தெரிந்தும் 120 அடி முழுக் கொள்ளலவு வந்த பின் செய்தியில் வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே அதிமுக அரசு தாமதமாக மேட்டூரை திறந்து விட்டதன் செயற்கை விளைவு காரணமாகவே திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடத்துக்கு நீர் திறக்கப்படும் 8 மதகுகள் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன என்று அப்பகுதி மக்கள் அதிமுக எடப்பாடி பழனிசாமி அரசு குற்றம் சாட்டுகின்றனர்.