மனித உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிய ஸ்டேன் சுவாமியின் இறப்பு இந்திய மனித உரிமைகள் வரலாற்றில் ஏற்பட்ட கறை என்று ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 84 வயதான சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியை என்ஐஏ அதிகாரிகள் எல்கர் பரிஷத் வழக்கில் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். 9 மாதங்களாக சிறையில் இருந்த மனித உரிமைகள் ஆர்வலரான ஸ்டேன் சுவாமி ஜூலை 5 ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில் ஸ்டேன் சுவாமி இறப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபை சிறப்பு செய்தித் தொடர்பாளர் மேரி லாலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்த ஒரு தகுந்த ஆதாரங்களின் அடிப்படையும் இல்லாமல் கைது செய்யப்படும் மனித உரிமைகள் ஆர்வலர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை ஸ்டேன் சுவாமியின் இறப்பு நமக்கு உணர்த்துகிறது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடிய கத்தோலிக்க பாதிரியாரான ஸ்டேன் சுவாமியின் இறப்பு இந்திய மனித உரிமைகள் வரலாற்றில் ஏற்பட்ட கறை.

மனித உரிமைகள் ஆர்வலரான அவரை தீவிரவாதி போல் நடத்தியதை ஒரு போதும் மன்னிக்க முடியாது. உரிமைகள் மறுக்கப்பட்டு பலியான ஸ்டேன் சுவாமி போல் இனி யாரும் உயிரிழக்கக் கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஸ்டேன் சுவாமியின் இறப்பை தொடர்ந்து சர்வதேச அளவில் இந்தியா மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதை மறுத்த வெளியுறவுத்துறை அமைச்சகம், என்ஐஏ அதிகாரிகளால் ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டார். அவர் மீது பதியப்பட்ட வழக்குகளின் தன்மை காரணமாக அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

சட்டத்தை மீறி செயல்பட்டதற்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிமைகள் நிலைநாட்டியதற்கு எதிராக அல்ல. அரசு அவரை சட்டத்தின்படியே நடத்தியது, அவரது உரிமைகள் எந்த இடத்திலும் மறுக்கப்படவில்லை என விளக்கமளித்திருந்தது.

தடுப்பூசி விலையை உயர்த்தி ஒன்றிய மோடி அரசு ஒப்பந்தம்; கோவிஷீல்டு ரூ.215, கோவாக்சின் ரூ.225