அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

வேளாண் சட்ட நகல்களை எரித்து போகி கொண்டாட்டம்- தமிழக விவசாயிகள்

போகி பண்டிகை நாளான இன்று (ஜனவரி 13), டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் வேளாண் சட்டங்களின் நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாளும், பொங்கல் தினத்திற்கு முந்திய நாள், பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் தங்களது வீட்டு வாசலில், பழைய தேவையற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை கொண்டாடினர். இதனால், பல இடங்களில் புகை மூட்டம் ஏற்பட்டது.

இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லியில் கடந்த 50 நாட்களாக கடும் குளிரிலும், பனியிலும் போராடி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பபெற முடியாது என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசால் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் வேளாண் சட்ட நகல்களை போகி தீயில் போட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சி மாவட்டத்தில் நத்தப்பேட்டை, கீழம்பி, கூரம், பாலுசெட்டி ஆகிய 4 இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு தலைமையிலும், வேளியூர் பகுதியில் மாவட்டத் தலைவர் மோகன் தலைமையிலும், உத்திரமேரூர் அருகே வேடப்பாளையம் பகுதியில் மாவட்டப் பொருளர் பெருமாள் தலைமையிலும், வேளாண் சட்ட நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கை மாவட்ட விவசாய சங்கத் தலைவர் மோகன் தலைமையில் பழையனூர் பகுதியிலும், கொளம்பாக்கம், ஜானகரிபுரம், செம்பாக்கம், மடையனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் சார்பில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டங்கள் நடைபெற்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் துளசி நாராயணன் தலைமையிலும், தாமரைப்பாக்கத்தில் மாவட்டத் தலைவர் சம்பத் தலைமையிலும் விவசாயிகள் வேளாண் சட்ட நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உச்சநீதிமன்றம் அமைக்கும் குழுவை ஏற்க மாட்டோம்; தொடரும் விவசாயிகள் போராட்டம்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.