கேளிக்கை

விஷாலின் அரசியல் நடவடிக்கையா… மக்கள் நல இயக்கம்

எங்கு தேர்தல் நடந்தாலும் போட்டியிடுவார் என்ற பெயர் பெற்றுள்ள விஷால், தற்போது மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னுடைய 42வது பிறந்தநாள் அன்று மக்கள் நல இயக்கத்தை துவங்கி கொடியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார் நடிகர் விஷால்.

சினிமா பிரபலங்கள் அரசியல் களத்தில் குதிப்பது புதிதல்ல. அந்த வரிசையில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்., ஜெயலலிதா தொடங்கி, சமீபத்தில் ரஜினி, கமல் என பட்டியலிடலாம். இவர்கள் வழியில் அடுத்ததாக நடிகர் விஷால் நேற்று (ஆகஸ்ட்- 29) துவக்கியுள்ளார்.

விஷாலின் பிறந்தநாள் விழா, இரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழா, மற்றும் நற்பணி மன்றத்தை இயக்கமாக மாற்றுதல் என முப்பெரும் விழாவாக சென்னையில் இன்று கொண்டாடினர் விஷால். இதில், தன் புதிய அமைப்புக்கான பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார்.

“மக்கள் நல இயக்கம்” என தன் இயக்கத்திற்கு பெயர் வைத்து, கொடியின் மேலே விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி என்ற வாசகத்துடன் அன்னை தெரஸா மற்றும் அப்துல் கலாமின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. கொடியின் மையத்தில் அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என அச்சிடப்பட்டுள்ளது. நடுவில் விஷாலின் முகம் வெற்றிக்கான குறி உடன் இடம் பெற்று இருக்கிறது.

நிகழ்ச்சியில் பேசிய விஷால், “அரசியல் என்பது மக்கள் பிரச்னையை தீர்ப்பது. ஆனால் அது ஒரு தொழிலாக மாறிவிட்டது. வீதியில் நடப்பதை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது பிணத்திற்கு சமம் என்றார்.
சமூகசேவை பின்னாளில் அரசியலுக்கு வருவதற்காக பொய்யாக பூசிக்கொள்ளும் சாயம் என்று கூறுகிறார்கள் அப்படி பொய்யாக இருந்தால் உங்களுக்கு தெரிந்துவிடும். இது நிஜ வாழ்கை இதில் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை.

மக்கள் பார்வையில் அரசியல்வாதிநாட்டுக்கு நல்லது செய்ய இத்தனை கட்சிகள் உள்ளன. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கொள்கைகள் இருக்கலாம். ஆனால் மக்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும். அதை தீர்த்து வைக்கும் பிரதிநிதியே அரசியல்வாதி. ஆனால், நம் பார்வையில் அரசியல்வாதி என்பது சம்பாதிக்கும் பதவியாக மட்டுமே சினிமாவிலும், நிஜத்திலும் நினைக்கிறோம். ஆனால் நான் உங்களை அழைத்தது நான் உங்களுக்காக இருக்கேன், உங்களுக்கு பின்னால் இருக்கேன் என்பதை கூறவே”, என பேசினார்.

திருப்பரங்குன்றம் தேர்தலை மனதில் வைத்து தான் விஷால் மக்கள் நல இயக்கத்தை துவங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் பெயரை சுட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

0 Replies to “விஷாலின் அரசியல் நடவடிக்கையா… மக்கள் நல இயக்கம்

Leave a Reply