குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும், இல்லாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து நாளை (01.12.2021) ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம் என்று விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தில் இதுவரை 750 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலைப்பாட்டில் ஒன்றிய பாஜக அரசு கடந்த ஓராண்டுக்காலமாக உறுதியாக இருந்தது.

இந்நிலையில் தீடீரென கடந்த வாரம் 19 ஆம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதே வேளையில் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

எனினும் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தையடுத்து 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நேற்று (29.11.2021) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை ஒருபுறம் விவசாயிகள் தங்களுக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடினாலும், குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 32 விவசாய சங்கங்கள் சார்பில் சிங்கு எல்லையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய விவசாய சங்க தலைவர்கள், “குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், போராட்டத்தின்போது விவசாயிகள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்,

போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் நினைவாக சிங்கூர் எல்லையில் நினைவிடம் அமைக்க வேண்டும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மின்சார சட்டத் திருத்த வரைவு மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

எங்கள் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு 30.11.2021 வரை அவகாசம் உள்ளது. ஒன்றிய அரசு பதிலளிக்கவில்லை எனில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து புதன்கிழமை (01.12.2021) ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம்” என்றும் விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களவை தேர்தலின் போது விவசாய விளை பொருள்களுக்கு இருமடங்கு விலை வழங்கப்படும் என்று நரேந்திர மோடி கூறினார். ஆனால், பிரதமராகி 7 ஆண்டுகளுக்கு மேலான பிறகும் தமது வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.