அங்கன்வாடி, சத்துணவு திட்ட நேரடி நியமன பணியில் சட்ட திருத்தம் மேற்கொண்டு விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% வரை இட ஒதுக்கீடு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு அதிரடிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்து வருகிறார். பல்வேறு புதிய திட்டங்களும், பெண்களுக்கு முன்னுரிமைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகளுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு பிரத்யேக குடும்ப அட்டை வழங்க உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது அப்பெண்களுக்கு ஏராளமான நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்கிறது.

இதனைத்தொடர்ந்து அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட அளவில் சுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அதில் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறையால் வெளியிடப்படும் இடஒதுக்கீட்டு ஆணைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ஏற்கனவே ஆணையிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் பெண்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

அதேபோல் சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் போன்ற பணியிடங்களில் 25% பணியிடங்களை விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோரைக் கொண்டு நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த பணியிடங்களை நேரடி நியமனங்களில் நிரப்பும் போது, 25% பணியிடங்களை விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருகுவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் வழி செய்யும் விதமாக உள்ளது. திமுக அரசின் இந்த அறிவிப்பானது திமுக அரசுக்கு மேலும் நற்பெயரை பெற்று தரும் வகையில் உள்ளது.