சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த பிறகு, நவம்பர் 12 ஆம் தேதி முதல் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி இருக்கிறது. இதன் எதிரொலியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

சென்னையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

தொடர்ந்து நான்காவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முழுக்க சுற்றுப்பயணம் செய்து நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற இருப்பதால், தமிழகத்தில் இன்று (10-11-2021) மற்றும் நாளை (11-10-2021) அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், டெல்டா மாவட்டங்கள், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த பிறகு, நவம்பர் 12 ஆம் தேதி முதல் மழை படிப்படியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக விருதுநகர் முதல் சென்னை வரை மொத்தம் 17 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . நாளையும் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.