கூகுள் பே, போன் பே உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது கண்காணிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, “தமிழக சட்டமன்ற தேர்தலை கண்காணிக்க 4 சிறப்பு பார்வையாளர்கள் தமிழகம் வர உள்ளனர். அதன்படி செலவின பார்வையாளர்களாக மதுமகாஜன், பாலகிருஷ்ணன் (ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரிகள்) ஆகிய 2 பேரும்,

பொது பார்வையாளராக அலோக்வர்தன் (ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி), காவல்துறை சிறப்பு பார்வையாளராக தர்மேந்திரகுமார் (ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி) ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று தமிழகத்தில் இருந்து தேர்தல் நடைபெறும் மற்ற மாநிலங்களுக்கு 60 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் சிறப்பு பார்வையாளர்களாக செல்கின்றனர்.

தமிழகத்தில், இதுவரை பறக்கும் படை, வருமான வரித்துறை நடத்திய சோதனையில் இதுவரை பணம், பரிசு பொருள் என ₹15.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பணமாக மட்டும் ₹14.13 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.

தவிர டிஜிட்டல் பரிவர்த்தனைகளான கூகுள் பே, போன் பே மூலம் வாக்காளர்களுக்கு பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதும் கண்காணிக்கப்படுகிறது. இதுபோன்ற தளங்கள் மூலம் எந்த கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது என்பது வங்கிகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு பலியான மாணவி அனிதாவின் 21வது பிறந்தநாள் இன்று