நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த வசதியையும் தமிழக அரசு செய்து தரவில்லை என்று சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
 
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பணியாற்றியபொன்.மாணிக்கவேல் கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்க பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு அரசு நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
 
இதை எதிர்த்த அதிமுக அரசு உச்ச நீதிமன்றம் வரை போராடி சென்றும் சிலை கடத்தல் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்க பொன்.மாணிக்கவேலையே சிறப்பு அதிகாரியாக பணிக்க உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது
 
இதற்கிடையே சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக உடன் பணியாற்றிய உயர் அதிகாரிகள் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகார் குறித்து விசாரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
 
இந்நிலையில் கடந்த 7-ம் தேதி சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு என தனி அலுவலகம் இல்லை. எங்களுக்கென தனியாக அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்பதாகவும், அதிகாரிகள் தனக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார்.
 
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை மீறுவதாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் இடைநீக்கம் செய்ய நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
 
இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த வசதியையும் தமிழக அரசு செய்து தரவில்லை என பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து உயர்நீதிமன்றம் அளிக்கும் உத்தரவுகள் நிறைவேற்றப்பட வேண்டும் என கூறிய நீதிபதிகள் தமிழக அரசை கண்டித்துள்ளனர். குற்றத்தின் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பதை கண்டறியப்பட வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
 
மேலும், சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் புகாருக்கு ஜனவரி 24-ம் தேதிக்குள் டிஜிபி பதில் தர ஆணையிட்டுள்ளது.