நாடு முழுவதும்‌ 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு தகுதிச்‌ சான்று பெறுவதற்கான கட்டணம்‌ பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வாகன உரிமையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு வாகன உரிமையாளர்கள், மற்றும் மாநில அரசுகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அந்த சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட வாகனங்களுக்கு தகுதி சான்றை புதுப்பிக்கும் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி தமிழகத்தில்‌ புதிய லாரிகள்‌ வாங்கும்போது 7 ஆண்டுகள்‌ வரை 2 ஆண்டுக்கு ஒரு முறையும்‌, 7 ஆண்டுகளுக்குப்‌ பிறகு ஆண்டுக்கு ஒரு முறையும்‌ வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலகத்தில்‌ வாகனத்தை காண்பித்து தகுதிச்‌ சான்று (எப்சி) பெற வேண்டும்‌.

இதுவரை இதற்கான கட்டணம்‌ லாரிகளுக்கு ரூ.800 என இருந்தது. இந்நிலையில்‌ லாரிகளுக்கான தகுதிச் சான்று பெறுவதற்கான கட்டணம்‌ ரூ.13,500 மற்றும்‌ பசுமை வரி ரூ.200 சேர்த்து ரூ.13,700 என ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது.

அதேபோல் 15 ஆண்டுகளுக்கு மேலான கார்‌ உள்ளிட்ட பயணிகள்‌ வாகனங்களுக்கான கட்டணம்‌ ரூ.8,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோக்களுக்கு ரூ.4,500 என கட்டணம்‌ உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தேதியில்‌ எப்சி சான்றிதழ்‌ பெறாத வாகனங்களுக்கு நாள்‌ ஒன்றுக்கு ரூ.50 வீதம்‌ அபராதம்‌ வசூலிக்கப்படும்‌ என்றும்‌ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல்‌ அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு வாகன உரிமையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.