தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை கடற்பகுதிகளில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன், “தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை கடற்பகுதிகளில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகர்வதால்,

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி , தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். இதன் காரணமாக இம்மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுரை, நாகப்பட்டினம், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் கனமழை பெய்யும். நாளை அக்டோபர் 31ஆம் தேதி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்.

புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினர், கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வங்கக் கடலை ஓட்டிய கடல் பகுதிகளிலும், கேரளாவை ஓட்டிய கடற்பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களை அடுத்த மூன்று நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.