பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பா.ஜனதா கூட்டணி அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியும் ஆதாரத்தையும் அவ்வப்போது கொடுத்தும் வருகிறது.
 
விமானத்தின் விலை உயர்வு, எண்ணிக்கை குறைவு, டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலாக, தனியார் நிறுவனமான அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆகிய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் காங்கிரஸ் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்துகிறது.
 
பாராளுமன்றத்தில் ஏற்கனவே பேசியபோது, ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.இந்நிலையில் மக்களவையில் ரபேல் விவகாரம் தொடர்பான விவாதத்தின்போது ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக தாக்கியுள்ளார்.
 
விவாதத்தை தொடங்கியதுமே, ரபேல் ஒப்பந்தம் குறித்து விவாதம் நடத்த பிரதமர் மோடிக்கு பாராளுமன்றத்தில் பேச  தைரியமில்லை என்றார் ராகுல் காந்தி.
 
இதற்கிடையே அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி அவைக்கு வந்து விவாதத்தை எதிர்க்கொள்ள தைரியம் கிடையாது, அவர் தன்னுடைய அறையில் மறைந்துக்கொண்டு இருக்கிறார் என்றார்.
 
பிரதமர் மோடி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தனக்கு எதிராக தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் கிடையாது என்றார். இதனை நிராகரித்த ராகுல் காந்தி, மோடியின் கூற்றில் உண்மை கிடையாது, ஒட்டுமொத்த தேசமும் அவரிடம் கேள்வி எழுப்புகிறது என்றார்.
 
பிரதமர் மோடி செய்தி நிறுவனத்திற்கு 90 நிமிடங்கள் பேட்டியளித்து பேசியுள்ளார், ஆனால் ரபேல் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்கவில்லை என்று கூறிய ராகுல் காந்தி, விமானத்தின் விலை ரூ. 1600 கோடியாக உயர்த்தப்பட்டதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது பொய்யானது.
 
பிரதமர் மோடி தன்னுடைய நெருங்கிய நண்பரும், தோல்வியடைந்த தொழில் அதிபருமான அணில் அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.
 
பல்வேறு போர் விமானங்களை தயாரித்த இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு ரபேல் ஒப்பந்தத்தை ஏன் வழங்கவில்லை? எனவும் ராகுல் காந்தி சூடாக கேள்வி எழுப்பினார்.
 
இதற்கிடையே நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறுக்கிட்டு, ராகுல் காந்தி சொல்வது பொய் என்று கத்தினார் .
 
இதனால் அமளி கடுமையானது. இதற்கிடையே முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், இப்போதைய கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் சம்பந்தப்பட்ட ஆடியோ ஒன்றை வெளியிட அனுமதி கோரினார் ராகுல் காந்தி. இந்த நேரத்தில் அவரின் மைக் துண்டிக்கப்பட காங்கிரஸ் எம்பிக்கள் கூச்சல் போட்டனர்,
 
உடனடியாக வீடியோவின் உண்மைத்தன்மை தொடர்பாக ஜெட்லி கேள்வி எழுப்பினார். உண்மைத்தன்மை தொடர்பாக உத்தரவாதம் அளிக்க ராகுல் மறுத்துவிட்டார். இதனையடுத்து ராகுல் காந்தி பொய் உரைக்கிறார் என்றார் ஜெட்லி.
 
இதற்கிடையே அதிமுக எம்பிகள் மேகதாது அணை சம்பந்தமாக கத்தி கூச்சல் தொடங்கவே கடும் அமளி ஏற்பட்டதால் அவையை ஒத்திவைக்க நேரிட்டது.
 
இதை தொடர்ந்து மக்களவையில் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு விவாதம் நடைபெறாமல் தடுத்து பிரதமர் மோடியை பாதுகாக்கின்றனர் எனவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
 
அருண் ஜெட்லி பேசுகையில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் உண்மையை காங்கிரஸ் விரும்பவில்லை; பொய்யான தகவலையே ராகுல்காந்தி மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
 
இந்த நிலையில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், இப்போதைய கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் படுக்கை அறையில் ரபேல் போர் விமானக் கொள்முதல் குறித்த ஆவணங்கள் இருப்பதாக அம்மாநில அமைச்சர் விஸ்வஜித் ரானே பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
 
கோவா மாநில அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது மனோகர் பாரிக்கர் ரபேல் போர் விமானக் கொள்முதல் குறித்த அனைத்து ஆவணங்களும் தன்வீட்டுப் படுக்கை அறையில் இருக்கிறது என்று தெரிவித்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே பேசிய ஆடியோ வெளியானது.
 
இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.
இவ்விவகாரத்தை கையிலெடுத்துள்ள காங்கிரஸ், பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவது மோடிக்கும் ., பாஜகவுக்கும் பெரும் தலைவலியை உண்டு பண்ணி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருந்து தெரிவித்தனர்