லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது பாஜக அமைச்சரின் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்ட சதி என சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, விவசாயிகள் மீது பாஜக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதி நடந்த வன்முறையில் விவசாயிகள் உள்பட 8 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

மேலும் விவசாயிகள் மீது கார் ஏறி கொல்லப்பட்ட சம்பவத்தை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இதனைத்தொடர்ந்து விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக ஒன்றிய பாஜக அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, ஆஷிஷ் பாண்டே லவகுஷா ராணா உள்ளிட்ட 13 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை மாநில சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது. இதன் கண்காணிப்பு நீதிபதியாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராகேஷ் குமார் ஜெயினை உச்ச நீதிமன்றம் நியமித்தது. மேலும் 3 மூத்த காவல் அதிகாரிகளையும் சிறப்பு விசாரணை குழுவுடன் சேர்த்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், லக்கிம்பூர் கேரி விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கார் நுழைந்தது மற்றும் வன்முறை சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி, எதார்த்தமாக நடந்தவை அல்ல.

மேலும், 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் 12 பேர் குற்றம் செய்தவர்கள், அவர்கள் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட வேண்டும்” என்று பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தனது பதிவில், “மோடி அவர்களே, நீங்கள் மீண்டும் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தையை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள். உண்மை எப்போதும் முன்னே செல்லும்” என தெரிவித்துள்ளார்.