ராணுவ கேன்டீனில் இந்திய பொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வாபஸ் பெற்றுள்ளது.

துணை ராணுவப்படையில் சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப், ஐடிபிபி, எஸ்எஸ்பி, என்எஸ்ஜி மற்றும் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் அடங்குவார்கள். இவர்களுக்காக செயல்படும் கேன்டீன்களில் ஆண்டுதோறும் 2 ,800 கோடி அளவுக்கு விற்பனை நடக்கும்.

கடந்த சில நாட்கள் முன்பு, பிரதமர் மோடி ‘சுய சார்பு இந்தியா’ என்ற பெயரில் 20 லட்சம் கோடி பொருளாதார தொகுப்பை அறிவித்தார். அதனையடுத்து, உள்நாட்டில் தயாரிப்பு பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் வாசிக்க: இறந்து கிடந்த நாயின் சடலத்தை சாப்பிட்ட நபர்- தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த துயர சம்பவம்

இதனை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், நாடு சுயசார்புள்ளதாக மாற வேண்டும். உள்நாட்டில் தயாரிப்பு பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இது, நிச்சயம் வருங்காலத்தில் சர்வதேச தலைமைக்கு இந்தியா அழைத்து செல்லும்.

இதன் அடிப்படையில், துணை ராணுவத்தினருக்கான கேன்டீன்களில் உள்நாட்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 10 லட்சம் துணை ராணுவப்படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 50 லட்சம் பேர் உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துவார்கள். நாட்டு மக்களும் உள்நாட்டு பொருட்களை மட்டும் பயன்படுத்துவதுடன், மற்றவர்களையும் அதனை செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தற்போது பின்தங்கி இருப்பதற்கான நேரம் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை வாய்ப்பாக மாற்ற வேண்டியதற்கான நேரம். உள்நாட்டு பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோம் என உறுதி ஏற்று கொண்டால், விரைவில் இந்தியா சுயசார்புள்ளதாக மாறிவிடும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது துணை ராணுவத்தினருக்காக செயல்படும் கேன்டீன்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வாபஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.