கொரோனா நிதியுதவி பெற, பிரதமர் மோடி உருவாக்கிய ‘PMCares Fund’ குறித்து ட்விட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து மக்களுக்கு உதவுவதற்காக பொதுமக்களிடம் இருந்தும், பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் நிதி பெறும் நோக்கத்தில் PMCares Fund என்ற பெயரில் புதிய அறக்கட்டளையை மார்ச் 27ஆம் தேதி பிரதமர் அலுவலகம் தொடங்கியது.

மேலும் வாசிக்க: இறந்து கிடந்த நாயின் சடலத்தை சாப்பிட்ட நபர்- தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த துயர சம்பவம்

இந்த அறக்கட்டளைக்கு பிரதமர் தலைவராகவும், பாதுகாப்பு துறை அமைச்சர், உள் துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்

இந்நிலையில், மே 11ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் வலைத்தளத்தில் இந்த நிதி தொடர்பான ஒரு தகவல் பகிரப்பட்டது.

இதுகுறித்து வழக்கறிஞர் பிரவீன் என்பவர் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் அளித்த புகாரில், பொதுமக்களை குழப்பி இந்த பேரிடர் காலத்தில் அரசுக்கு எதிராக சந்தேகங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த தகவல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் ட்விட்டர் கணக்கை, சோனியா பராமரிப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், பிரதமரின் PMCares Fund தொடர்பாக மக்களிடம் தவறான கருத்துக்களை பரப்பியதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது கர்நாடக காவல்துறை.