கொரோனா காரணமாக விமான போக்குவரத்து துறை பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கூறி, ஏர் இந்தியா 48 விமானிகளை ஒரே நாளில் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

உலகமே கொரோனா பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், சிறு, குறு தொழில்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதில் குறிப்பாக விமான போக்குவரத்து துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் பெரிய அளவில் இழப்புகளைச் சந்தித்து வருவதால், சம்பளம் கொடுக்கும் நிலையில் நிறுவனம் இல்லை என நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) 48 விமானிகளை ஒரே நாளில் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

அவர்களில் சிலர் இதற்கு முன்பு ராஜினாமா செய்து பின்னர், ராஜினாமாவை வாபஸ் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், திடீரென்று ஏர் இந்தியா வியாழக்கிழமை அவர்களில் சிலர் விமானியாக பணியில் விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த போதே, ​​அவர்களுக்கு பணி நீக்கம் தொடர்பான கடிதத்தை அனுப்பி அவர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இதற்கு காரணமாக, தற்போதைய விமான போக்குவரத்து அளவு, COVID க்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. மேலும் இது எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பில்லை. நிறுவனம் பெரிய அளவில் இழப்புகளைச் சந்தித்து வருகிறது. மேலும் சம்பளம் கொடுப்பதற்கு போதிய பணம் இல்லை என்று பணி நீக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன், ஏர் இந்தியா நஷ்டத்தில் உள்ளதாகக் கூறி, ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் 5 ஆண்டுகளுக்கு கட்டாய விடுமுறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: 5 ஆண்டுகள் சம்பளம் இல்லாமல் கட்டாய விடுமுறையா.. கொந்தளிக்கும் ஏர் இந்தியா ஊழியர்கள்