பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணன் – அர்ஜுனன் போன்றவர்கள் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் அதற்கு விளக்கமளித்துள்ளார்.

ரஜினிகாந்த் சமீபத்தில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய ரஜினி காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு சிறப்பாக கையாண்டதாகவும், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணன் – அர்ஜுனன் போன்றவர்கள் என்றும், இவர்களில் யார் கிருஷ்ணன்.. யார் அர்ஜுனன்.. என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் கூறினார்.

இந்நிலையில், நேற்று சென்னை போயஸ் தோட்டத்தில் தனது இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், காஷ்மீர் பிரச்னையை பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் ராஜதந்திரத்துடன் கையாண்டுள்ளனர்.

காஷ்மீர் என்பது பயங்கரவாதிகளுக்கு தாய்வீடாக இருந்து வருகிறது. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதற்கு நுழைவு வாயிலாக உள்ளது. காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்படுவதற்கான மசோதாவை முன்கூட்டியே அறிவித்திருந்தால் எதிர்கள் விழித்திருப்பார்கள்.

எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் பாதுக்காப்புடன் தொடர்புடையது என்பதால் காஷ்மீர் பிரிப்பு நடவடிக்கையை பாராட்டினேன் என்று ரஜினிகாந்த் விளக்கமளித்தார்.

தொடர்ந்து அவரிடம் கட்சி அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த ரஜினி, கட்சி அறிவிப்பு எப்போது என்பதை நிச்சயமாக ஊடகங்கள் முன்னிலையில் தெரிவிப்பேன் என்றார். மேலும், தமிழக அரசியல் மையமாக மீண்டும் போயஸ் கார்டன் வருமா என்ற கேள்விக்கு, சிரித்துக் கொண்டே பேசிய ரஜினி, காத்திருந்து பாருங்கள் என கூறினார்.

முன்னதாக அவரிடம் தமிழ் படங்களுக்கு தேசிய விருது புறக்கணிக்கப்படுகிறதா.. என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது. அது தேர்வுக் குழுவினரின் முடிவு என்றார்.