அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் ஒப்புதல். ஆனால் எல்லை   எழுப்புவதில் சமரசம் இல்லை என கூறி உள்ளார்.
 
சட்டவிரோத குடியேறிகளை தடுக்க மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு சுவர் அமைப்பதற்கு 570 கோடி டாலர் நிதி ஒதுக்கும்படி அதிபர் டிரம்ப் நாடாளுமன்றத்தில் முறையிட்டார்.
 
ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டிரம்ப் கேட்ட தொகையை அளிக்க மறுத்து விட்டனர்.அதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் முக்கிய அரசு துறைகள் முடங்கின. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் சம்பளமின்றி தவித்து வருகிறார்கள்.
 
இந்த நிலையில், அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, எல்லை சுவர் கட்டுவதற்கான நிதி கோரும் மசோதா உட்பட 2 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
 
ஆனால், இரண்டு மசோதாக்களும் நிறைவேறுவதற்கு தேவையான 60 வாக்குகளை பெற முடியாமல் தோல்வியை எட்டியது. இதனால், அரசு நிர்வாக முடக்கம் அமெரிக்காவில் 35-வது நாளாக நீடித்து வருகிறது.
 
டொனால்டு டிரம்ப் 35 நாள் அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர சம்மதித்து உள்ளார். ஆனால் மெக்சிகோ எல்லையில் சுவரை கட்டுவதில் எந்தவித சமரசம் செய்யவில்லை என கூறி உள்ளார். “மக்கள் எல்லோரும் வாசிக்கும் அல்லது எல்லை சுவரில் என் வார்த்தைகளை கேட்பார்கள் என நான் நம்புகிறேன், இது ஒரு சலுகை அல்ல” என தனது டுவிட்டரில் கூறி உள்ளார்.
 
மேலும், “நான் தெளிவாக இருக்கிறேன். ஒரு சக்திவாய்ந்த சுவர் அல்லது எஃகு தடையை நாம் கட்டியெழுப்ப வேண்டும், உண்மையில் வேறு வழியில்லை.
 
காங்கிரஸில் இருந்து ஒரு நியாயமான ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்றால், அரசாங்கம் மீண்டும் பிப்ரவரி 15 அன்று முடங்கும் அல்லது இந்த அவசர நிலைக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்காவின் அரசியலமைப்புச்சட்டம் மற்றும் அரசியலமைப்பின் கீழ் எனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை நான் பயன்படுத்துவேன். நமக்கு பெரும் பாதுகாப்பு வேண்டும்.” இவ்வாறு டிரம்ப் அதில் கூறி உள்ளார்.