அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கிய நிலையில், இப்படத்தில் மூன்று நடிகைகள் மற்றும் மூன்று வில்லன்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தில் நடிகர்கள் ஆனந்த்பாபு, டேனியல் பாலாஜி மற்றும் சாய்தீனா ஆகிய மூவரும் நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்கின்றனர். இவர்களும் பட பூஜையில் கலந்து கொண்டு உறுதிபடுத்தியுள்ளனர். இருப்பினும் இந்த மூவரை தவிர முக்கிய வில்லன் கேரக்டர் ஒன்றும் இந்த படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் இப்படத்தில் மூன்று நடிகைகள் நடிக்கவிருப்பதாகவும், அதில் நயன்தாரா தவிர கீர்த்திசுரேஷ் மற்றும் ஒரு பிரபல நடிகை இப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவர்களுடன் படத்தில் கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இப்படம், தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.