புதுக்கோட்டை மாவட்டம் தைலமரக்காட்டில் மந்திரவாதி பேச்சை கேட்டு தந்தையே 13 வயது மகளை நரபலி கொடுத்த சம்பவத்தில் பெண் மந்திரவாதி மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவரது முதல் மனைவி இந்திரா,வின் மகள் வித்யா 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த மே 18ஆம் தேதி வித்யா அவரது சகோதரியுடன் அருகில் உள்ள பிடாரி கோவில் குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றார். வெகுநேரமாகக் குழந்தையைக் காணாததால் பெற்றோரும் உறவினர்களும் வித்யாவை தேடியுள்ளனர்.

அப்போது பாப்பான்குளம் அருகே தைலமரக்காட்டு பகுதியில் வித்யா கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.

விசாரணையில், சொத்து மற்றும் பணம் பெருக ஆசைப்பட்டு பன்னீர்செல்வமும், அவரது 2வது மனைவியும் சேர்ந்து மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்டு பன்னீர்செல்வம் தனது மகளை நரபலி கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தந்தையும் இதற்கு உடந்தையாக இருந்த சில உறவினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது முக்கிய குற்றவாளியான பெண் மந்திரவாதி வசந்தி மற்றும் அவரது உதவியாளர் முருகாயி கைது செய்யப்பட்டுள்ளனர். மந்திரவாதி வசந்தி கடந்த 20 ஆண்டாக மாந்திரீகங்கள் செய்து வந்துள்ளார். வசியம் செய்வதிலும் கைதேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் இருந்து 2000 ஆண்டுகளுக்கு பழமையான ராமர் சிலையை கடத்தியது தொடர்பாக பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பன்னீர்செல்வத்தை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க: தீர்வில்லாத கொரோனாவுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் தமிழக அரசு