தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இன்று 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது. அதில், சென்னையில் மட்டும் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.

மேலும் வாசிக்க: நகரங்களில் கொரோனா பரவல் படுவேகம்- தமிழகத்தில் முடக்கப்படும் 5 மாநகராட்சிகள்

முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின்படி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 4 நாட்களுக்கு கடைகள் ஏதும் இருக்காது என்பதால், மளிகை, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்னை உட்பட 5 மாநகாரட்சி பகுதிகளிலும் பொதுமக்கள் இன்று காலை முதலே குவிந்தனர்.

சென்னையின் அனைத்து இடங்களிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து தேவையான பொருட்களை மக்கள் வாங்கிச் சென்றனர். சமூக விலகல் கடைப்பிடிக்காமல் மக்கள் முண்டியடித்தது ஆபத்துக்கு வழிவகுக்கும் வகையில் இருந்தது. இதனால் முழுஊரடங்கு தடுப்பு நடவடிக்கை செயலிழந்தது, அதுவே கொரோனா சமூக பரவலுக்கு வழிவகை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தென்காசி, திருவாரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளார்கள்.