டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (84 வயது) காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜி, மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 10 ஆம் தேதி (ஆகஸ்ட் 10) அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.

இதன் காரணமாக தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து பல நாட்கள் கோமா நிலையில் இருந்த பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 31) உயிரிழந்தார்.

இதனையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் என பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மகன் அபிஜித் முகர்ஜி தனது ட்விட்டர் பதவில், ”மருத்துவர்களின் கடுமையான முயற்சியையும் மீறி எனது தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் பிரார்த்தனை மேற்கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக பணியாற்றியவர் பிரணாப் முகர்ஜி. காங்கிரஸ் ஆட்சியின் போது நிதியமைச்சராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும், திட்டக்குழு துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

2008-ம் ஆண்டு பிரணாப் முகர்ஜிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. 2019-ம் ஆண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசு நாட்டிலேயே உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி பிரணாப் முகர்ஜியை கவுரப்படுத்தியது.

இதுதவிர சர்வதேச அளவில் 14 பல்கலைக்கழகங்கள் மூலம் கவுரவ டாக்டர் பட்டமும், வங்கதேசம், ஐவரிகோஸ்ட், சைப்ரஸ் நாடுகள் மூலம் கவுரவ விருதுகளும் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்டன.

மேலும் வாசிக்க: மாநில உரிமையை பறிக்கும் NEP 2020- தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்